எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
மழை தன் வன்மையழிந்து
சிட்டுக்குருவி இரைகொத்தும் ஒலியில்
பெய்கிறது
குளிர்
அமைதியாய்ப் பரவி
அணைக்கிறது
அவித்த வேர்க்கடலை கொஞ்சம்
அருகில் இருக்கிறது
அதன் கூர்முனையைக்
குத்தி உடைக்கிறேன்
செம்பகுதியாகப் பிரிகிறது
வேர்க்கடலையின் தொட்டு
யாரோ சொல்லி வைத்ததுபோல்
அதன் இடது புறத் தொட்டில்தான்
பருப்புகள் இரண்டும் வெந்து படுத்திருக்கின்றன
தொட்டை வாய்க்குள் கவிழ்த்து
கடலையை உதிர்க்க முயல்கிறேன்
உள்ளிருக்கும் நொய்ந்த பருப்பு
பிடியிழந்து வாய்க்குள் விழுகிறது
கூடவே
இரண்டு நீர்த்துளிகளும் விழுகின்றன
அந்த நீரின்
தனித்த உப்பு ருசிக்கு
நான் தடுமாறுகிறேன்
அதுதான்
விதியின் புதிரான சுவையோ !
ஊழியின் மர்ம முடிச்சுகள்
அவிழ்ந்த சுவையோ !
பல்லிடுக்கில் கசியும் குருதியின்
வெப்பச் சுவையோ !
காந்தியின் இதயத்தில் உரமேற்றிய
அறவுணர்ச்சியின் சுவையோ !
புன்செய்க்குள் உழுது விதைத்த உழவனின்
வியர்வைச் சுவையோ !
அந்த மண் என் நாவிற்கு எழுதிய கடிதத்தின்
கண்ணீர்ச் சுவையோ !
- கவிஞர் மகுடேசுவரன்
Copyright © 2024 magudeswaran.com - All Rights Reserved.
இணையதள போக்குவரத்தை பகுப்பாய்வு செய்வதற்கும் உங்கள் இணையதள அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் தரவு மற்ற எல்லா பயனர் தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.