எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா ? கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா ? அவர் இராமாயணத்தைத் தமிழ்க் காவியமாக எழுதியதாலா ? இல்லை. கம்பர் நாளொன்றுக்கு ஏழ்நூறு செய்யுள்களை இயற்றுவார். பார்க்கும் பொருளெல்லாம் அவருக்குக் கவிதைப் பொருளே. ஒன்றைக் கண்ட நொடியில் அடைமழை பொழிவதுபோல் வெண்பாக்களோ விருத்தங்களோ கூறவல்லவர் கம்பர். அதனால்தான் அவர் கவிச்சக்கரவர்த்தி. தமிழ்க் கவிஞர் பெருமக்களுள் கம்பர் அளவுக்கு அரசனை எதிர்த்து நின்றவர் வேறு யாருமிலர் என்றே தோன்றுகிறது. கம்பர் அடையாத பெருமையுமில்லை. கம்பர் படாத துன்பமுமில்லை.
கம்பர் சோழ நாட்டில் உள்ள திருவழுந்தூர் என்ற ஊரில் பிறந்தவர். கம்பரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பர். சிலர் பன்னிரண்டாம் நூற்றாண்டு என்பர். கம்பரின் குடும்பத்தார் அங்கிருந்த காளி கோவிலில் பூசை செய்யும் உரிமை பெற்றிருந்தனர். இளமை முதலே மடைதிறந்த வெள்ளம்போல் செய்யுள் இயற்றும் திறமையைப் பெற்றிருந்தார். கம்பர் கவிதை இயற்றும்பொழுது காளி தேவியே தீப்பந்தம் பிடித்ததாகச் செவிவழிக் கதைகள் உள்ளன.
இளமையிலேயே கவிபுனையும் ஆற்றலோடு விளங்கிய கம்பரைப் பற்றிக் கேள்வியுற்ற திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல், அவர்க்கு அனைத்து வகையான கல்வியையும் புகட்டினார். சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்ட கம்பர் பிற்காலத்தில் அவரைப் புகழ்ந்து பலவிடங்களில் பாடியிருக்கிறார்.
கம்பரின் கவியாற்றலை அறிந்த சோழ மன்னன் குலோத்துங்கன் அவரை வரவழைத்துத் தம் அவையில் வீற்றிருக்கச் செய்தான். சோழனின் அவையில் தலைமைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர்.
கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் அழைத்த சோழ மன்னன், இராமகாதையைத் தமிழிற் செய்யுமாறு வேண்டிக்கொண்டான். அதன்படி கம்பர் இயற்றிய பெருங்காவியமே ‘கம்ப இராமாயணம்.” இராமசரிதையைத் தமிழ் நிலத்திற்கேற்றவாறு புதிதாய்ப் பாடினார் கம்பர்.
மன்னன் கட்டளையிட்டதும் ஒட்டக்கூத்தர் இராப்பகலாக உட்கார்ந்து இராமகாதையை எழுதிக்கொண்டிருந்தார். கம்பர் மன்னனின் கட்டளை பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் கணிகையர் வீடுகளில் தவங்கிடந்தார். கம்பரின் இந்தப் போக்கால் சினமுற்ற சோழன் இருவரையும் அழைத்து ‘இராமாயணம் எழுதும் பணி எந்நிலையில் இருக்கிறது ?’ என்று வினவினான். ஒட்டக்கூத்தர் தாம் பாதிவரை எழுதி முடித்துவிட்டதாகக் கூறினார்.
ஒட்டக்கூத்தர் எழுதியதைவிட தாம் மிகுதியாய் எழுதியதாய்க் கூறவேண்டுமென்று விரும்பிய கம்பர், தாம் முக்கால்வாசி முடித்துவிட்டதாய்க் கூறினார். உண்மையில் அவர் ஒரு பாட்டைக்கூட எழுதியிருக்கவில்லை. ஐயுற்ற மன்னன் கம்பரிடம் அவர் எழுதிய பாடல்கள் சிலவற்றைக் கூறும்படி கேட்க, கம்பர் மடைதிறந்த வெள்ளம்போல் எண்ணற்ற செய்யுள்களைக் கூறினாராம். அதனால் மகிழ்ந்த மன்னன் தன் ஐயம் தீர்ந்தான்.
கம்பர் கூறிய அந்தச் செய்யுள்களுக்கு முன், கம்பர் எழுதிய இராமாயணத்தின்முன் - தாம் எழுதியவை நிகரில்லை என்றுணர்ந்த ஒட்டக்கூத்தர், அவற்றையெல்லாம் கிழித்தெறிந்தாராம். அது கேள்வியுற்ற கம்பர், அவரிடம் சென்று அவரைத் தேற்றி, ஒட்டக்கூத்தர் எழுதிய உத்தரகாண்டத்தைத் தம் நூலோடு சேர்த்துக்கொண்டார்.
கம்ப இராமாயணத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றச் சென்றார் கம்பர். அங்கிருந்தவர்கள் தில்லைத் தீட்சிதர்கள் பரிந்துரைத்தால் அரங்கேற்ற ஒப்புவதாகக் கூறினர். அதனால் கம்பர் தில்லைக்குச் சென்றார். மூவாயிரம் தீட்சிதர்களிடம் ஒருமனமாக எப்படி ஒப்புதல் பெறுவது என்று கம்பர் திகைத்து நின்றார் அங்கே.
அவ்வமயம் அங்கே பாம்பு கடித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவனைக் கவிபாடி உயிர்ப்பித்தார்.
மங்கையொரு பங்கர் மணிமார்பில் ஆரமே,
பொங்குகடல் கடைந்த பொற்கயிறே, – திங்களையும்
சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே,
ஏறிய பாம்பே இறங்கு.
– என்பது அவர் பாடிய பாடல்களில் ஒன்று.
கம்பர் பாடியதால் உயிர்பெற்றெழுந்தான் சிறுவன். அதனால் அகமகிழ்ந்த மூவாயிரம் தில்லைத் தீட்சிதர்கள் ஒருங்கே மனமொப்பி கம்பர் இராமாயணம் பாட இசைவெழுதித் தந்தனர்.
அந்த இசைவைப் பெற்றுக்கொண்டு திருவரங்கம் வந்த கம்பர் சடகோபர் அந்தாதி பாடித் தொடங்கி, கம்ப இராமயணத்தை அரங்கேற்றினார். இதனால் கம்பரின் புகழ் நாடெங்கும் பரவிற்று.
ஒருமுறை குலோத்துங்கச் சோழன் மேல்மாடத்தில் உலவுகையில் ‘இப்புவியெல்லாம் எனக்கடிமை” என்றான். வேந்தனைவிடவும் கவிஞனே உயர்வு என்பதை உணர்த்த விரும்பிய கம்பர் ‘புவியெல்லாம் உனக்கடிமை. நீவிர் எனக்கடிமை” என்றாராம். இதனால் சோழன் கம்பரைச் சினந்துவிட்டான்.
தம்மைக்காட்டிலும் சடையப்ப வள்ளலையே புகழ்ந்து பாடுவதால் கம்பர்மீது சோழனுக்கு ஏற்கெனவே வெறுப்பு இருந்தது. அதன்பிறகு அங்கிருக்கத் தகாதென்று உணர்ந்த கம்பர், “மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ….” என்றவாறு சோழ நாட்டை நீங்கினார். பிறகு பாண்டிய நாட்டுக்கும் ஓரங்கல் நாட்டுக்கும் சென்றிருந்தார்.
சோழனை நீங்கியதும் கம்பர் வறுமையுற்றார். குறுநெல்மணிக்காகப் பாட வேண்டிய துயருற்றார்.
ஆந்திரத்திலுள்ள ஓரங்கல் நாட்டுக்குச் சென்று ‘பிரதாப உருத்திரன்” என்னும் மன்னனின் அன்பைப் பெற்று வாழ்ந்தார். கம்பரின் கவியாற்றலால் ஈர்க்கப்பட்ட பிரதாபன் அவர்க்கு வேண்டியன அனைத்தும் செய்து அவரைச் சோழநாட்டுக்குக் கொணர்ந்து சேர்ப்பித்தான்.
கம்பனின் மகன் அம்பிகாபதி கதை நமக்குத் தெரியும். சோழன் மகளைக் காதலுற்றதால் அவன் கொல்லப்பட்டான். நாமறியாத இன்னொன்றும் உள்ளது. கம்பருக்குக் காவேரி என்றொரு மகளும் இருந்தாள். கவிஞனின் மகள் பேரழகியாய் இருப்பாள்தானே ? கம்பர் மகள் காவேரியும் காவிரியை நிகர்த்த பேரழகி. அவள்மீது தீராத காமமுற்ற சோழன்மகன் ஒருவன் அவளைத் தொடர்ந்து துரத்தி வந்தான். இவனிடம் சிக்கிச் சின்னாபின்னப்படுவதைவிட உயிர்துறத்தலே மேலென்று நினைத்த கம்பன் மகள், காவிரி வெள்ளத்தில் குதித்து உயிர்நீத்தாள்.
மகனையும் மகளையும் இழந்த கொடுந்துயர் தாளாமல்தான் கம்பர் சோழ நாட்டை நீங்கினார் என்பாரும் உளர்.
பிறநாட்டு அரசனின் அன்பைப் பெற்றவராய் நாடு திரும்பியிருக்கும் கம்பரைக் கண்டு சோழன் அஞ்சினான். கம்பரிடம் சோழமன்னன் குலோத்துங்கன் நைச்சியமாய் மீண்டும் நட்பு பேணிக் கொன்றுவிட்டான்.
அரண்மனைக்குக் கம்பரை வரவழைத்து அவர்மீது புலியை ஏவினான். கம்பரைக் கண்டு அந்தப்புலி கொல்நினைவின்றி அன்பு காட்டி நின்றதாம். அதனால் சோழனே அம்பெய்தி கம்பரைக் கொன்றான். அம்புபட்ட மார்போடு கம்பர் விட்ட சாபம்தான் சோழர் பரம்பரையை வேரோடு சாய்த்து உருத்தெரியாமல் ஆக்கிற்று.
மரணத்தறுவாயில் கம்பர் பாடிய பாட்டு :-
வில்லம்பு சொல்லம்பு மேதகவே யானாலும்
வில்லம்பிற் சொல்லம்பு வீறுடைத்து – வில்லம்பு
பட்டுருவிற்று என்னை; என் பாட்டம்பு நின்குலத்தைச்
சுட்டெரிக்கும் என்றே துணி.
அதன்பின் பகைவர்கள் படையெடுத்து வந்து சோழ தேசத்தைக் கைப்பற்றினர். சோழர் பரம்பரை அழிவுற்று மண்ணோடு மண்ணாய்ப் போனது.
சோழனால் தம் மக்களைப் பறிகொடுத்த கம்பர் இறுதியில் அவனாலேயே கொல்லப்பட்டுத் தம் இன்னுயிரை இழந்தார்.
கம்ப இராமாயணத்தின் இலக்கிய நலன்கள்தாம் நாமறிந்தவை. அதை இயற்றிய கம்பர் தம் வாழ்வில் அரச பீடத்தைத் தொடர்ந்து உறுத்தினார். நாம் கற்பனையிலும் நினையாத போராட்ட வாழ்வைத்தான் வாழ்ந்து மறைந்தார்.
மேலை நாடுகளில் ஷேக்ஸ்பியரைப் பற்றி எண்ணற்ற நூல்களும் திரைப்படங்களும் வெளியாகின்றன. ஷேக்ஸ்பியர் வாழ்ந்த வாழ்க்கையைவிடவும் கொந்தளிப்பும் உயிர்ப்பதைபதைப்பும் காவியத் துயரங்களும் மிகுந்த வாழ்வு கம்பருடையது.
- கவிஞர் மகுடேசுவரன்
தமிழைப்பற்றிய பெருமைப் பேச்சு எங்கே தொடங்கினாலும் சங்கத் தமிழ், சங்க காலம் என்று சொல்லப்படுவது தவறாது. அது என்ன சங்கத் தமிழ் ? சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட, சங்கத்தில் அங்கம் வகித்த பெரும்புலவர்களால் வளப்படுத்தப்பட்ட உயர்தனிச் செம்மொழி என்பதால் அப்பெயர்.
அத்தகைய சங்கங்கள் நிறுவி, தமிழ் வளர்க்கப்பட்ட முற்காலமே சங்ககாலம். சங்கம் என்பதற்கு ஒத்த நிறையுடைவர்கள், தகுதியுடையவர்கள், எண்ணமுடையவர்கள் ஒன்றுகூடுமிடம் என்பது பொருள்.
தமிழ்ச்சங்கங்கள் தோன்றி தமிழ் வளர்த்த காலம் சங்க காலம். சங்ககாலம், தமிழ்ச்சங்கங்கள் குறித்து நாம் அறிமுக அளவிலேனும் தெரிந்து வைத்துக்கொள்வோம். தமிழறிஞர்கள் பலர் இதுகுறித்து எளிமையாய் விளக்கியிருக்கிறார்கள். எல்லாரும் சங்கம் குறித்துப் பேசுகிறார்கள். நாமும் அவ்வாறே பேசிப் பழகியிருக்கிறோம். இப்போதேனும் தமிழ்ச்சங்கங்கள், சங்ககாலங்கள் குறித்துச் சிலவற்றை அறிந்துகொள்வோமே.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறோம். பொதிகை மலையில் அகத்தியர் என்ற முனிவர் மாத்தமிழுக்கு முதன்மை முனியாய் வீற்றிருக்கிறார். அவருடைய தலைமையில் தமிழ்ப்புலவர் குழு ஒன்று, இயற்றுவதும் இசைப்பதுமாய் தமிழ்வளர்ப்பில் ஈடுபட்டிருக்கிறது.
அந்தப் பொதிகை மலைக்கும் தெற்கே குமரிக்கண்டத்தில் நாற்பத்தொன்பது நாடுகள் சூழ தமிழ்நாடு பரவியிருந்தது. அந்த நாற்பத்தொன்பது நாடுகள் என்னென்னவென்றால் - தெங்க நாடுகள் ஏழு, மதுரை நாடுகள் ஏழு, முன்பாலை நாடுகள் ஏழு, பின்பாலை நாடுகள் ஏழு, குன்ற நாடுகள் ஏழு, குணகாரை நாடுகள் ஏழு, குறும்பாணை நாடுகள் ஏழு. மொத்தம் நாற்பத்தொன்பது.
அங்கே குமரி ஆறு, பஃறுளி ஆறு போன்றவை பெருக்கெடுத்து ஓடின. குமரி மலை என்ற மலையும் இருந்ததாம். இப்போதுள்ள குமரிக்கும் தெற்கே பன்னெடுந்தூரம் அந்நிலப்பரப்பு பரந்திருந்தது.
அங்கே இருந்த பாண்டிய நாட்டுத் தலைநகரம்தான் மதுரை. இப்போதுள்ள மதுரை நகரம் பிற்காலத்தில் தோன்றியது. குமரிக்கண்ட மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அகத்திய முனிவரை நாடித் தம் தலைநகரில் தமிழுக்கு ஒரு சங்கம் நிறுவித் தமிழ்வளர்த்துத் தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். காய்சினவழுதி என்பது அப்பாண்டிய மன்னனின் பெயராய் இருத்தல் வேண்டும். ஏனெனில் தலைச்சங்கத்தைப் பாதுகாத்து வளர்த்த பாண்டிய மன்னர்கள் எண்பத்தொன்பது பேர். அவர்களில் காய்சினவழுதி முதலாமவன். கடுங்கோன் என்பவன் கடைசி மன்னன்.
பாண்டியனின் வேண்டுகோளுக்கேற்ப தென்மதுரையில் தலைச்சங்கம் நிறுவப்பட்டு நம்மொழியின் முதன்மைத் தலைமையகமாகச் செயல்படத் தொடங்கியது. அக்காலத்தில்தான் அகத்தியம் என்ற இலக்கண நூலை அகத்தியர் எழுதினார். இயல், இசை, நாடகம் என்று தமிழை மூவகையாகப் பிரித்து ஆக்கங்கள் செய்தனர். ஒருவர் புலவராய் எழுதியவற்றை இச்சங்கம் சீர்தூக்கி ஆராயும். அரங்கேற்றும். குற்றங்குறையுள்ளவற்றைச் செம்மைப்படுத்தும். சங்கம் ஏற்றுக்கொண்டால் அவர் தமிழ்வல்லார் ஆவார்.
அகத்தியர் தொடங்கி திரிபுரம் எரித்த முடிசடைக்கடவுள், குன்றம் எறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவர் என 549 பெருந்தமிழ்ப்புலவர்கள் தலைச்சங்க பீடத்தில் அமர்ந்து அணிசெய்திருக்கின்றனர். 4449 புலவர்கள் தலைச்சங்கத்தில் வந்து பாடியவர்கள். 89 பாண்டிய மன்னர்கள் அதைப் போற்றி வளர்த்திருக்கின்றனர். அது நிலவிய காலம் 4440 ஆண்டுகள் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள். தலைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று ‘இறையனார் அகப்பொருள்.’ அதற்கு எழுதப்பட்ட உரைநூலொன்றின் பகுதி நம்மிடம் கிட்டியிருக்கிறது. இச்செய்திகள் அதில் காணக்கிடைக்கின்றன.
குமரிக்கண்டத்தில் தென்மதுரை கண்ட தலைச்சங்கத்தைப் பற்றிப் பார்த்தோம். பாண்டிய மன்னனுக்குத் தன் தலைநகரம் கடலொட்டிய துறைநகரமாய் இருந்தால் நல்லது என்று தோன்றியிருக்கிறது. சோழன் புகாரிலும் சேரன் வஞ்சியிலும் கடல்பார்த்து இருக்கும்போது, தானும் அதுபோல் இருக்கவேண்டும் என்ற விருப்பம் பாண்டிய மன்னனுக்கு. அதனால் தாமிரவருணியை அடுத்திருந்த துறைமுக நகரான கபாடபுரத்திற்குத் தலைநகரை மாற்றிக்கொண்டானாம்.
தலைநகர் மாற்றத்தால் தமிழ்ச்சங்கமும் கபாடபுரத்திற்கு மாறியது. கபாடபுரத்துத் தமிழ்ச்சங்கம் இடைச்சங்கம் எனப்பட்டது. இடைச்சங்க காலம் 3700 ஆண்டுகள் நீடித்ததாம். இந்தக் கால வரம்புகளை நாம் ஆய்வுக்குட்படுத்தலாம் என்றாலும் பன்னெடுங்காலம் நீடித்தது என்று கொள்வதில் தயக்கம் வேண்டியதில்லை.
இடைச்சங்கத்திலும் அகத்தியமே தமிழுக்கு முதல் நூல். அகத்தியரின் முதன்மை மாணவர்களில் ஒருவர் தொல்காப்பியர். அகத்தியத்தையொட்டி அவர் எழுதிய இலக்கண நூல்தான் தொல்காப்பியம். மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம் ஆகிய இலக்கண நூல்களும் இந்தக் காலத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இவற்றில் தொல்காப்பியம் மட்டும் நம்காலம்வரை காப்பாற்றப்பட்டுக் கையில் கிடைக்கிறது.
வெண்டேர்ச் செழியன் என்ற பாண்டியன்தான் இடைச்சங்க காலத்தின் முதல் மன்னன். மொத்தம் 59 பாண்டிய மன்னர்கள் இடைச்சங்கத்தைக் காத்தவர்கள். இவர்களில் ஐம்பது பாண்டிய மன்னர்கள் சங்கப் புலவர்களாகவும் விளங்கினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சங்கப் புலவர்களாக ஐம்பத்தொன்பது பேர் இருந்திருக்கிறார்கள். 3700 புலவர்கள் இடைச்சங்கத்தில் தோன்றிப் பாடியிருக்கிறார்கள்.
தலைச்சங்கத்தில் 4440 புலவர்கள், இடைச்சங்கத்தில் 3700 புலவர்கள் என்னும்போது ஆளுக்கொரு நூல் என்றாலும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்நெடுங்காலமும் பெருநூல்களில் பயின்றதால்தான் தமிழ் இந்த அளவுக்குச் செம்மையும் சிறப்பும் பெற்று வளர்ந்திருக்கிறது.
அந்நூல்கள் எல்லாம் கால வெள்ளத்தில் அழிந்துவிட்டன. ஆழிப்பேரலையையும் கடல்கோளையும் கூரைமூடும் வெள்ளத்தையும் நாம் கண்கூடாகக் கண்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அதனால் இச்செய்திகளில் எள்ளளவும் உண்மைக்கு மாறாக இல்லை என்று நம்பலாம்.
முடத்திருமாறன் என்ற பாண்டியனின் ஆட்சிக்காலத்தில் கடல்கோள் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு குமரிக்கண்டம் தாழ்ந்தது. ஆழிப்பேரலைகள் மேவின. தென்மதுரையும் கபாடபுரமும் நீலத்தண்ணீரில் மூழ்கின. காப்பாற்ற முடிந்த தமிழ்ச்சுவடிகளோடு உயிர்தப்பிப் பிழைத்து உள்நாட்டுக்குள் வந்தான் பாண்டிய மன்னன்.
கடல்கோள் ஆபத்தை உணர்ந்ததால் தன் தலைநகரை நாட்டின் நடுவில் தோற்றுவிக்க எண்ணினான் பாண்டியன். அவ்வாறு தோன்றிய நகரம்தான் தற்போதைய மதுரை. கபாடபுரத்து அழிவோடு இடைச்சங்க காலம் முடிந்தது.
மதுரை நகரை நிர்மாணித்தவுடன் முடத்திருமாறப் பாண்டியன் செய்த முதல் வேலை கபாடபுரத்தில் இருந்தது போன்ற ஒரு தமிழ்ச்சங்கத்தை நிறுவியதுதான். இந்தச் சங்கமே கடைச்சங்கம் எனப்பட்டது. மூன்று சங்கங்களில் இறுதிச் சங்கம் இது என்ற பொருளில்.
கடைச்சங்கத்தில் 49 புலவர்கள் அணிசெய்தனர். சிறுமேதாவியார் சேந்தம்பூதனார் தொட்டு நாமறிந்த நெற்றிக்கண் நக்கீரர்வரை அப்புலவர்களின் பட்டியல் இருக்கிறது. கடைச்சங்கத்தில் தம் பாடல்களை அரங்கேற்றிய புலவர்களின் எண்ணிக்கை 449. முடத்திருமாறன் தொடங்கி உக்கிரப்பெருவழுதி வரை நாற்பத்தொன்பது பாண்டிய மன்னர்கள் காலம் முடிய சங்கம் இருந்தது. நாற்பத்தொன்பது பாண்டியர்களில் மூவர் சங்கப் புலவர்களாயும் இருந்துள்ளனர். சுமார் 1850 ஆண்டுகள் கடைச்சங்கம் நிலவியதாகக் கூறுகிறார்கள்.
கடைச்சங்க காலத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டன. அவற்றில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய முப்பத்தாறு நூல்கள் இன்றும் நம்மிடம் இருக்கின்றன. கடைச்சங்க காலத்தில் தமிழ் தன்னுடைய முழு வளர்ச்சியை எட்டிப் பாரெங்கும் பரவும் பான்மை எய்திச் சிறந்தது என்றே கூறவேண்டும்.
- கவிஞர் மகுடேசுவரன்
உலக மொழிகள் சிலவற்றில் ‘பொய்’ என்ற வார்த்தையே இல்லையாம். அதற்கு என்ன அர்த்தம் ? அவர்கள் வாழ்க்கையில் பொய் என்பதே இல்லை என்று அர்த்தம். எதையும் மாறாக மறைத்துச் சொல்லவே மாட்டார்கள் என்று அர்த்தம். அதுபோல் நம் மொழியில் கடன் என்ற சொல் உள்ளது. அது ஆங்கிலச் சொல்லான லோன் என்னும் பொருளைத் தருவதன்று. கடன் என்ற சொல்லுக்குக் கடமை என்பதே பொருள். கடன் என்பதற்குக் கடப்பாடு, முறைமை ஆகியனவும் நம் தொன்மையான பொருள்கள். ஒருபோதும் அச்சொல்லுக்குத் தற்கால வழக்கில் வழங்கப்படும் கடன் என்ற பொருள் கிடையாது. என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்றால் என் கடமை என்றே ஆகும். திருக்குறளில் இடம்பெறும் கடன் என்னும் சொல் கடமையைத்தான் குறிக்கிறது.
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்(கு)
உப்பாதல் சான்றோர் கடன்.
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
இவையாவும் கடன் என்னும் சொல்லைக் கடமை என்ற பொருளில் பயின்ற குறட்பாக்கள். நாம் கடன்பெற்று வாழ்ந்தவர்கள் அல்லர். கொடை தருவதைப் பண்பாடாகக் கொண்டவர்கள். ஒரு காலத்தில் கொடுத்தலும் பெற்றுக்கொள்வதும் எந்த நெருக்கடியுமற்ற இயல்பான நடத்தையாக இருந்தது. சுமார் இருபதாண்டுகளுக்கு முன்வரைகூட கடன் என்பது நம்முன் வைக்கப்பட்ட வாழ்க்கை நிர்ப்பந்தமாக இருக்கவில்லை. ஆனால், தற்காலத்தில் நிலைமையே வேறு.
அப்போதும் நமக்கு வீடுகள் இருந்தன. விவசாய நிலங்கள் இருந்தன. கல்வி பயின்றோம். வாழ்க்கைக்குப் பல்வேறு தேவைகள் இருந்தன. யாரும் கடன்பட்டுக்கொண்டிருக்கவில்லை. ‘அவங்களுக்குக் கடன் இருக்குதாமா...’ என்பது அதிர்ச்சிகரமான ஒரு கிசுகிசுப்பாகப் பரவிய நிலையும் இருந்தது. ஊரெல்லாம் கடன்வாங்கி வைத்திருப்பவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். சிறுசிறு கைமாற்றுகள் பண்ட மாற்றுகள் ஆகியவை இருந்தன. அதற்கே கடப்பாடுற்றவர்களாய் உறங்கமாட்டார்கள்.
நீங்கள் மாதச் சம்பளக்காரர்களாக, தொழில்முனைவோராக இருக்கின்றீர்கள். குடும்பத் தலைவர் அல்லது தலைவி. உங்களுக்கு வருமானம் வருகிறது. எல்லாரும் வளர்ந்து பொருள் செய்கின்றோராகத்தான் மாறுகிறோம். இந்த உலகத்தின்மீது நமக்குள்ள ஒரே அதிகாரம் நாம் ஈட்டிக்கொள்கின்ற நம் பணம்தான். அதைக்கொண்டு நம் தேவையை நிறைவேற்றுகிறோம். உணவு, உடை, உறைவிடம் ஆகியனவற்றுக்காகச் செலவிடுகிறோம். கல்விக்கும் மருத்துவத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் மனமகிழ்வுக்கும் நம் பணத்தைச் செலவிடுகிறோம். நம் சம்பாத்தியத்தில் செலவுபோக கணிசமாக மீதமாகிறது. அவற்றைச் சேமிக்கிறோம். சேமித்தவற்றைக்கொண்டு செயற்கரிய செயல் ஒன்றைச் செய்துகொள்கிறோம். அல்லது பற்றாக்குறையான காலங்களில் பயன்படுத்திக்கொள்கிறோம். வாழ்க்கை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் செல்கிறது. இது ஒரு வகை.
இன்று உங்களால் அதுபோல் வாழமுடியுமா ? கல்வியை விற்கிறார்கள். கல்விப் பருவத்திலிருந்தே நம்மைக் கடனாளி ஆக்குகிறார்கள். கற்றுவெளிவந்தபின் அந்தக் கல்வியைக்கொண்டு பணம் சம்பாதிக்கவேண்டும். சம்பாதித்தவுடன் முதற்கடமையாக பழைய கடன்களை அடைக்க வேண்டும். உணவுக்கு நிறையச் செலவாகிறது. போக்குவரத்துக்கு வாகனம் வேண்டும். அதைக் கடன்பட்டு வாங்கிக்கொள்ளவேண்டும். உடைகள் கொள்ளை விலை விற்கின்றன. அந்தச் செலவுகளையும் சமாளிக்கவேண்டும். உறைவிடம் என்றால் நமக்குச் சொந்த வீடு பூர்வீகத்தில் இருக்கும்தான். ஆனால் பூர்வீகத்தில் நாம் உயிர்வாழும் வாய்ப்புகள் முடிவுக்கு வந்துவிட்டன. நகர் நாடிப் பிழைக்கிறோம். நகரத்தில் வீட்டுவாடகை கட்டுக்கடங்குவதில்லை. அங்கே இடத்திற்கும் கொள்ளைவிலை. வீடு வாங்கிக்கொள்வதன் மூலம் வாடகையையும் வரிப்பிடித்தத்தையும் மீதமாக்கிக்கொள்ளலாம் என்ற மாயையில் நம்முடைய ஒட்டுமொத்த எதிர்கால வருமானத்தை எழுதிக்கொடுத்து வீடு வாங்கிக்கொள்கிறோம். அடுக்குமாடி வீடு என்றால் வாடகைக்கு நிகரான பணத்தை ‘பராமரிப்பு மற்றும் இதர பிறவற்றுக்காக’ அழுவோம். நாம் உயிரோடிருப்பதற்கு வேண்டிய சிறுதொகைபோக மீதத்தொகையை அந்த வீட்டுக்காக இருபதாண்டுகள் தொடர்ச்சியாகக் கட்டுவோம். கட்டி முடித்தபின் நம் பொருளீட்டும் ஆற்றல் முற்றாக வடிந்திருக்கும். நம்மை நாமே கைவிடக்கூடிய பொருளாதார விரக்தியின் விளிம்புக்குச் சென்றிருப்போம். நீங்கள் அவ்வாறு ஆக்கப்பட்டீர்கள். ஒருபோதும் எதுகுறித்தும் கேள்வி கேட்க மாட்டீர்கள். அருகில் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்தானா... நம் இயற்கை வளங்கள் அனைத்தும் சூறையாடப்படுகின்றனவா... நம் தலைமாட்டில் அணு உலைகள் தகிக்கின்றனவா... கல்விக்கொள்ளையா... மருத்துவத்தில் இரத்தம் உறிஞ்சுகின்றனரா... குடியடிமைத்தனம் பெருகிவிட்டனவா... எங்கும் ஊழலா... பெண்களும் குழந்தைகளும் எல்லாச் சீரழிவுக்கும் ஆளாகின்றனரா... எவனோ எப்படியோ போகட்டும். உங்களுக்கு மாதம் பிறந்தால் இஎம்ஐ கட்டியாகவேண்டும். தலையைக் குனிந்துகொண்டு வாழ்பவராய், சூடு சுரணையற்ற ஜென்மமாய், தன்னலவாதியாய் மாற்றப்பட்டுவிட்டீர்கள். இனி உங்களைக் குறித்து யார்க்கும் அச்சமில்லை. நீங்கள் முடித்துக்கட்டப்பட்டுவிட்டீர்கள்.
நீங்கள் கேட்கவேண்டும்... யார்வந்து யார்க்குக் கடன் கொடுப்பது ? கடன்படவேண்டியவர்களா நாம் ? என் அழகிய பொருள்பொதிந்த வாழ்க்கை கடன் துளையை அடைப்பதற்காக ஆயுள்முழுக்க அல்லாடுகின்ற ஒன்றா ? அப்படி என்ன வெங்காயத்தை நான் பெற்றுக்கொள்ளப்போகிறேன் ? என் கல்விக்கு எப்படி விலைவைத்தாய் ? என் உறைவிடத்துக்கும் அதன் நிழலுக்கும் எட்டாத விலை வைத்தவர் யார் ? என் தேவைக்கும் ஈட்டலுக்கும் பொருந்தாச் சமனை உருவாக்கியவன் எவன் ? நீங்கள் கேட்கவேண்டும். ஆனால் கேட்கமாட்டீர்கள். உங்களுக்குக் கடன் இருக்கிறது. மாதம் ஆயிரத்தைந்நூறு கட்டுவதுபோல் ஒரு பைக் வாங்கினீர்கள். ஒருதவணை பிசகட்டுமே. உங்கள் ஏழ்பிறப்புக்கும் மறவாத ஈன விசாரணையை நீங்கள் எதிர்கொள்வீர்கள். இத்தனைக்கும் மறுநாள் உரிய வட்டியோடும் தண்டத்தோடும் செலுத்தச் செல்கிறீர்கள்தான். கட்டாதபோது வண்டியை எடுத்துக்கொள்ளலாம் அவன். ஆனால், உங்கள் தன்மானத்தைக் குத்திக் குதறியெடுப்பதில் உங்களுக்குக் கடன் கொடுத்தவன் எதையும் பார்ப்பதில்லை. அந்தச் சொற்களில்தாம் எத்துணை அதிகாரம் ? அடிமைபோல் உணரவேண்டும் நீங்கள். ஆனால் கமுக்கமாக இருந்துகொள்வீர்கள். இந்தச் செயலில் இருப்பவன்தான் நம் வங்கியாளன்.
என் நண்பர்களிடம் நான் சொல்கின்ற அறிவுரை இரண்டே இரண்டு: குடிக்காதே... கடன் வாங்காதே...! குடிப்பதில் மதுவும் புகையும் அடக்கம். குடியடிமை மீள்வதில்லை. தன்னைக் கொன்றுகொண்டிருக்கும் அவன் தன்னையே இழிவுபடுத்திக்கொண்டவன். தன்னின்பத் தருக்கன் அவன். உங்கள் நுரையீரலின் காற்றை உறிஞ்சும் திறனுக்குப் பெயர்தான் உயிர். பிராணமய. புகைப்பதன் மூலம் அந்தக் கருவியைப் பொசுக்குகிறீர்கள். குடியும் புகையும் உள்ளவர்கள் ஏதோ ஓரிடத்தில் தன்னை, தன்சார்ந்தவர்களை மொத்தமாகக் கைவிட்டுவிடுவார்கள். அவனைச் சார்ந்திருக்கும் உறவுகள் நரகத்தில் உழல்வோரே. இதைப் போதிக்கவேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எல்லாரும் குடியடிமைகள். அதனால் அவர்கள் இதுகுறித்த மாற்றுப்பார்வை என்பதுபோல் நீட்டி முழக்குவார்கள். அவை பயனற்றவை. அடுத்து கடன் வாங்குவது. பத்தாயிரம் ரூபாய் ஓரிடத்தில் வாங்கிக்கொண்டு ஒருமாதம் கழித்து அதே பத்தாயிரமாகத் திருப்பிக்கொடுப்பது கைமாற்று. இது நம் வலுவுக்கடங்குகின்ற ஒன்று. சுற்றோட்டத்தில் சிறு நிகழ்வு. யார்க்கும் பாதிப்பில்லை. எங்கும் வழக்கமாக இருக்கின்ற ஒன்று. ஆனால், வட்டி என்கின்ற ஒன்று தோன்றுமிடத்திலும், நம் வாழ்க்கையின் பெரும்பகுதி தவணையாய் அடைக்கவேண்டிய பகாசுரக் கடனுக்கு இலக்காகும் இடத்திலும் நீங்கள் எக்கச்சக்கமாய் மாட்டிக்கொள்கின்றீர்கள். அங்கே நீங்கள் சுரண்டப்படுகிறீர்கள். கடன் என்ற மாயையில் விழுந்து ஏமாறுகிறீர்கள்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கடன்பட்டு பத்து இலட்சத்துக்கு வீடு வாங்கினேன். இப்போது அந்த வீட்டின் மதிப்பு நாற்பது இலட்சங்கள். எனக்கு எவ்வளவு இலாபம் தெரியுமா ? கடன்வாங்காதிருந்தால் இவ்வாய்ப்பை இழந்திருப்பேனே... இப்படிச் சொல்கிறவர்கள் ஏராளம். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இவையெல்லாம் மிகப்பெரிய பொருளாதாரப் போக்குகளின் சிறுகண்ணிகள். 1998-இல் பத்து இலட்சத்துக்கு வாங்கிய வீட்டின் மதிப்பைத் தங்கத்தில் பாருங்கள். அப்போது பவுன் விலை ரூ. 3200. அந்தப் பத்து இலட்சத்துக்கு 312 பவுன்கள்/சவரன்கள் வாங்கியிருக்கலாம். இப்போது அவ்வீட்டின் மதிப்பு நாற்பது இலட்சங்கள். இன்றைய பவுன் விலை ரூ. 20000 எனக்கொள்வோம். அந்த நாற்பது இலட்சத்துக்கு 200 பவுன்கள் மட்டுமே வாங்க முடியும். உங்கள் சொத்து மதிப்பு - சுமார் நூறு சவரன்கள் அளவுக்குக் காணாமல் போயிருக்கின்றது. எண்கள் பெருகிவிட்டனவேயொழிய மதிப்புயரவில்லை. ஒருவேளை அவ்வீட்டின் தற்கால மதிப்பு அறுபது இலட்சம் எனில் எந்த உயர்ச்சியும் ஏற்படவில்லை. எண்பது இலட்சம் என்றால் போட்ட முதலுக்குக் கொஞ்சூண்டு வட்டி கிடைத்திருக்கிறது. பெருந்தொகைக்குச் சொத்துகளை விற்பது அத்துணை எளிதன்று. உங்கள் ஒற்றைக் கையெழுத்தையோ அல்லது இசைவான ஒரு தலையசைப்பையோ வைத்துக்கொண்டு உங்கள் அசையாச் சொத்தைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் ஈனக்கூட்டம் ஒன்று அரசியற்பலத்தோடு ஸ்கார்பியோக்களில் திரிவதை அப்போதுதான் உணர்வீர்கள்.
அடுத்து 1991 முதல் 2010வரை மதிப்புயர்ந்ததுபோல் இனியும் ஆகும் என்றெண்ணாதீர்கள். 1975முதல் 1989வரை இந்நாட்டின் சொத்துகள் எந்த விலையுயர்ச்சியையும் பெரிதாகக் காணவில்லை. எல்லாம் அப்படியப்படியே கிடந்தன. கடந்த 2011க்குப் பிறகு தங்கம் வெள்ளி போன்றவற்றின் விலை தம் உயர்ச்சியைத் தக்கவைக்கமுடியாமல் சன்னஞ்சன்னமாகச் சரிந்துகொண்டிருக்கின்றன. இனி அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு இத்தகைய நிலையே நீடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? நிலத்தின் விலைகள் தடுமாறுகின்றன. நில வியாபாரிகள் ஒருபோதும் தங்கள் நிலங்களை இருப்பாக வைத்துக்கொள்ளமாட்டார்கள். நிலத்தை விற்று விற்று பணமாக்கிக்கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள். ஏன் அவர்கள் விற்பது விலையேறுகின்ற ஒன்றாயிற்றே... வைத்துக்கொள்ளலாமே. மாட்டார்கள். அங்கே நீங்கள் இலக்காவீர்கள். வரிக்குப் பயந்து வீட்டுக் கடன்களை வாங்காதீர்கள். எண்ணெய்ச் சட்டிக்குள் விழப்பயந்து எரிக்குள் விழுவதைப் போன்றதுதான் அது. எழுபதாயிரம் எண்பதாயிரம் வருமானம் உள்ள உங்களால் ‘பத்தாயிரம் சேமிக்கிறேன்’ என்று சொல்ல முடியவில்லை என்றால் உண்மையில் நீங்கள் யார் ? இங்கே சம்பாதித்து எங்கோ எடுத்தெறிகின்ற ஊதாரியா ? வெறும் பணமாற்று நிலையமா ?
ஒவ்வொரு ஆயிரமாகச் சேமியுங்கள். தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். முதல் ஒரு இலட்சத்தைச் சேர்க்கும்வரைதான் கடினமாக இருக்கும். அடுத்தடுத்த இலட்சங்கள் எளிதில் சேரும். சேமிப்பின் ஆற்றலை உங்கள் செலவுகளின்மீது உணருங்கள்.
ஒவ்வொரு மாரடைப்புக்குப் பின்னால், ஒவ்வொரு விபத்துக்கும் காரணமான மனக்குழப்பத்திற்குப் பின்னால், ஒவ்வொரு உறவுப் பிரிவுக்கும் பின்னால், ஊர்ப்பெயர்வு தேசப்பெயர்வு இடப்பெயர்வு அவமானம் தற்கொலை ஆகியவற்றுக்கும் பின்னால் நிச்சயமாக ‘ஒரு கடன் தொல்லை’ இருந்திருக்கிறது. அது சிறிதோ பெரிதோ - அவரவர் தகுதிக்கேற்ற துன்பச்சுமை. தொழிற்கடனையும் குடும்பக்கடன்களையும் ஒன்றாகப் பாவிக்காதீர்கள். இரண்டின் அளவீடுகளும் வெவ்வேறு. தொழிற்சாலைகளை இழுத்துப் பூட்டியபின் சேதாரமில்லாமல் வெளியேறுகின்றவர்கள் முதலாளிகள். முதற்கடனை வெற்றிகரமாகக் கையாண்ட மயக்கத்தில் அடுத்த கடனுக்கும் போகாதீர்கள். அடுத்தடுத்த ஒன்றில் வசமாகச் சிக்கிக்கொள்வீர்கள். சூடுபட்ட பூனையாகத் தள்ளியிருங்கள் !
இந்த நிமிடமே என் கடனைத் தீர்க்க முடியும் என்ற நிலையில் கடன் வாங்கலாம். எனக்கும் சிறிய வீட்டுக்கடன் உண்டு. வீட்டுக்கடன் என்றால் என்ன என்று உணர்வதற்காகவே அதை வாங்கினேன். அதுவே தவறு, மடத்தனம் என்பதே நான் கற்றுக்கொண்ட பாடம். ஆனால், அக்கடனை இந்த நிமிடம் என்னால் தீர்த்துக்கொள்ளவும் முடியும். எனக்குக் கடனட்டை இல்லை. கைப்பேசியொன்றைக் குறிப்பிட்ட வங்கிக் கடனட்டையைப் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாகப் பத்து விழுக்காடு தள்ளுபடி என்பதற்காக விளையாட்டுப்போல் கூட்டாளியின் கடனட்டையில் வாங்கிக்கொண்டேன்.
வேறு வழியே இல்லை என்றால் - நாம் பட்டுள்ள கடனை அந்தக் கணமே முறித்துக்கொள்ள முடியும் என்ற வலிமையான இடத்தில் நீங்கள் இருந்தால் - உங்கள் தேவைக்குச் சிறு பகுதியாக மட்டுமே கடன் வாங்குங்கள். அதை நீங்கள் நிர்வகிப்பீர்கள். வீட்டுக் கடனே என்றாலும் மூன்றில் ஒருபகுதிக்கு மட்டுமே கடன்படுங்கள். எண்பத்தைந்து விழுக்காடுவரை என்பதெல்லாம் வேண்டா. வளர்ந்த நாடுகளில் வீடுகள் என்பவை மதிப்பிழந்த சொத்துகள். சொல்வதற்கு இன்னும் ஓராயிரம் உள்ளன. பிறிதொரு நாள் மேலும் சொல்கிறேன். குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று செய்வான் வினை - குன்றின்மீதிருந்து யானைப்போர் காண்பதைப்போன்றது நம் கையிலுள்ள பொருளைக்கொண்டு செய்கின்ற வினை.
பின்குறிப்புகள் :
1. இரண்டு இலட்சத்துக்கு வாங்கியது இருபது ஆகலாம். நாற்பதுகூட ஆகலாம். பத்துக்கோடி ஆகியிருக்க வாய்ப்பில்லை. அப்படி ஆகும் என்றால் அம்பானி எண்ணெய் சுத்திகரிக்க மாட்டார். அம்பத்தூரில் வாங்கிப் போடுவார். கொங்கு பகுதிகளில் மின்வெட்டால் எல்லாச் சொத்துகளும் விலையிறங்கின. 2000-இல் வாங்கிய இடம் ஒன்றை இன்றும் விற்கமுடியாத நிலையுள்ளது.
2. 1991 முதல் 2010 வரை ஏறிய விலையேற்றத்தின் மனப்பதிவுகளை மக்களிடமிருந்து அகற்றுவது பெரும்பணியாகத்தான் இருக்கும்போலுள்ளது. அந்த விலையேற்றம் மதிப்பேற்றம் இல்லை என்பதையும் பதிவில் விளக்கியுள்ளேன். எல்லார் உள்ளத்தையும் அரம்போன்று அறுத்துக்கொண்டிருப்பது நிலத்தின் விலையேற்றம். அந்த நிலத்தை சென்ட் முந்நூறு ரூபாய்க்கு விற்றுச் சென்ற குடும்பமும் அதை ஏதோ ஒரு கடனுக்காகத்தான் விற்றிருக்கும். அக்குடும்பத்தினர் நிலையை நினைத்துப் பார்க்கலாம். அவர்களும் இன்றும் அருகிலேயேதான் இருப்பர். ஆனால், அப்படியெல்லாம் சிந்திக்கமாட்டோம். நம் அக்கறைகளை வேறாக மாற்றிவிட்டார்கள். அடிபட்டுத் துள்ளத் துடிக்கச் சாகக் கிடப்பவனைப் பார்த்தும் பாராததுபோல் போகும்படி ஆக்கியவை நம் பொருளாதாரப் போக்குகள். கடன் அடைக்க வேண்டும். சம்பாதித்து நிலம் வாங்கிப் போடவேண்டும். உண்மையில் நாம் அத்தகைய கொடூர நெஞ்சத்தினர் அல்லர். ஆனால் நம்மையே அப்படி ஆக்கிவிட்டார்கள்.
- கவிஞர் மகுடேசுவரன்
ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழகத் தொழில்நகரம் திருப்பூர். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் கடலுக்கு அப்பால் தொடங்கிய இந்தச் சுணக்கம் அத்தோடு நின்றுவிடவில்லை. அடுத்த ஆண்டுகளில் சாயப்பட்டறைகளுக்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பாக மற்றொரு வடிவம் எடுத்தது. இடையில் உற்பத்திக்கான ஆற்றல் ஆதாரமான மின்சாரம் பகலைப் பாதியாய் முடக்கியது. ஆடை உற்பத்தித் தொழிலின் கச்சாப் பொருளான நூல்விலை சரசரவென்று ஏறியபடி இருந்தது. போட்டி நாடுகள்மீது வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு புதுமோகம் தோன்றத் தொடங்கியது. வங்கிகள் திருப்பூர்த் தொழிலுக்கு விரித்திருந்த வரவேற்புப் பந்தலை அவசர அவசரமாகப் பிரித்தன. தொழிலாளர் பற்றாக்குறை தலைவிரித்தாடத் தொடங்கியது.
‘திருப்பூருக்கு பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்றபோது ஆள்கள் தேவை என்னும் விளம்பரங்களையே அதிகம் பார்த்தேன்’ என்று ஜெயலலிதா ஒருமுறை குறிப்பிட்டுச் சொன்னார். பெரிய நிறுவனத்தினர் அறுபது எழுபது கிலோமீட்டர்கள்வரை பணியாளர் பேருந்துகளை இயக்கி தொழிலாளர்களை ஏற்றிவந்து நிலைமையைச் சமாளித்தனர். வெளிமாநிலத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை நாடி மெல்ல மெல்ல வரத் தொடங்கினர். எண்பதுகளின் இறுதியில் தொடங்கி 2006வரை கொடிகட்டிப் பறந்த திருப்பூர்ப் பின்னலாடை ஏற்றுமதித் தொழில் இன்று கறாரான சுயபரிசீலனைக் கட்டத்தில் இருக்கிறது.
விவசாய விளைபொருளான பருத்தியைக் கொள்முதல் செய்து பதமாக்கிப் பக்குவப்படுத்தி நூலாக நூற்கிறார்கள். இந்த நூற்கும் செயல் ஸ்பின்னிங் மில்கள் எனப்படுகிற பெருங்கூடத் தொழிலாக மாறியிருக்கிறது. இத்தகைய நூற்பாலைகளிடமிருந்து நூற்கண்டுகளைக் கொள்முதல் செய்யும் திருப்பூர் பின்னலாடைத் துறை அவற்றைத் துணியாக நூற்றுச் சலவை செய்து, சாயமேற்றிப் பல்வேறு பதச்செயல்முறைகள்மூலம் பண்படுத்துகின்றனர். அவ்வாறு பெறப்பட்ட துணியுருளை ஆடை உற்பத்தியாளரின் தொழிற்கூடத்தில் துண்டு துண்டுகளாய் வெட்டப்பட்டு நாம் அணிகின்ற டிசர்ட்-ஆக, டாப்ஸாகத் தைக்கப்படுகிறது. திருப்பூர்ப் பகுதியில் நடக்கின்ற தொழில் இதுதான்.
ஆடை உற்பத்தித் தொழிலின் கச்சாப் பொருளான பருத்தி, மனித நாகரிக வரலாற்றோடு தொடர்புடையது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் வளரும் பணப்பயிர் இது. பலபோக சாகுபடி தரவல்லது. தமிழகத்தில் பல்வேறு நெருக்கடிகளால் விவசாயம் நலிவடைந்ததும் பருத்தி விளைச்சல் குறைந்தது. பருத்திக்கொள்முதலுக்கு நாம் வடமாநிலங்களையே பெரிதும் நம்பியுள்ளோம். பருத்தி விவசாயமும் இரசாயன உரங்களை நம்பியே நடக்கிறது. மிகை மற்றும் குறை விளைச்சலுக்கு ஏற்பப் பருத்தி ஏற்றுமதியை அனுமதிப்பதும் மறுப்பதுமான நிலையில் அரசாங்கம் உள்ளது. கச்சாப் பொருள்களை அப்படியே ஏற்றுமதி செய்வதைக்காட்டிலும் அவற்றைப் பயன்படுத்தி மதிப்பேற்றப்பட்ட உற்பத்திப் பொருளாக ஏற்றுமதி செய்வதையே கருத்தில்கொள்ளவேண்டும். பருத்தி வரத்தின் இந்த ஊசலாட்ட நிலைமை ஆடைத் தொழிலின் முதல் நிர்ணய காரணியாக மாறியிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. சிறுதொழில் முனைவோர் இத்தொழிலில் நுழைய இயலாது. பெரும் முதலீடு கோரும் ஆலைத்தொழில் இது. திருப்பூர் சுபிட்சமாக இருந்தபொழுது நூற்பாலைத் தொழில், ஆடை உற்பத்தித் தொழில்துறையை மிகவும் நம்பியிருந்தது. நூல் விற்பனையில் நூற்பாலைகளிடையே வலுவான போட்டி நிலவியது. இந்தச் சிரமங்களால் நூற்பாலையினர் தம் தொழில்மீதே களைப்படைந்த செய்தியெல்லாம் உண்டு. திருப்பூரின் சிறு தொழிலதிபர்கூட தமக்கான நூல் கொள்முதலைப் பேராலைகளிடமிருந்து கடனாகவே பெறவல்லவராக இருந்தார். ரொக்கத்திற்குக் கொள்முதல் செய்யும்போது இயன்றவரை நூல்விலையை அடித்துப் பேசி வாங்கினார். அவருக்கான தேவையை நிறைவேற்ற நூற்பாலையின் விற்பனைப் பிரிவு தினமும் அவரை அழைத்துப்பேசி வாய்ப்பு கோரின.
திடீரென்று இந்தக் காட்சி மாறியது. சர்வதேச நிலைமைகளைக் கருத்தில்கொண்டு நூல்விலை ஏறத் தொடங்கியது. பருத்தி விவசாயிகள் ஏற்றுமதிக்கு அனுமதி கோரிப் பெற்றனர். நூலுக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டது. கடனாகத் தந்து பிற்பாடு வசூலித்துக்கொண்டிருந்த நூற்பாலைகளிடம் திருப்பூர்த் தொழில் துறையினர் ரொக்கம் செலுத்திக் காத்திருக்க வேண்டியவர்களானார்கள். கேஷ் அண்ட் கேரி முறை நிர்ப்பந்தமானது. விலையேற்றத்தைக் கணித்து நூல் விற்பனையைத் தாமதித்தார்கள் என்ற கருத்தும் நிலவியது. தம் அணுக்கமான வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றவே நூற்பாலைகளால் இயலவில்லை. ஒரு ஆர்டரின் மதிப்பில் நாற்பது விழுக்காடுவரை நூல்கொள்முதலுக்கு உடனே முதலிட வேண்டிய நிலைக்கு திருப்பூர்ப் பின்னலாடை அதிபர் தள்ளப்பட்டார். இதனால் ஆரோக்கியமான பொருளாதாரத்துடன் இயங்கிய நிறுவனங்கள்கூட தள்ளாட்டத்தை, வங்கி நெருக்கடிகளைச் சந்தித்தன. கடன் நெருக்கடிகளால் இயங்கிய நிறுவனங்கள் கழுத்தறுப்புக்கு ஆளாயின.
நூல் வணிகத்தில் ஆடை உற்பத்தியாளரிடமிருந்த மேலதிகாரம் நூற்பாலை அதிபர்களின் கைக்கு மாறியது. இடையில் திருப்பூர்ப் பின்னலாடைத் தொழில் துறையின் மேல்வரிசை முதலாளிகள் பலர் நூற்பாலைகள் நிறுவி அவற்றுக்கும் அதிபர்களாக, பங்குதாரர்களாக ஆகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பின்னலாடைத் தொழிலுக்காகக் குரல்கொடுக்க வேண்டிய இடத்தில் இருந்த அவர்கள் வெளிப்படையாக மௌனம் சாதித்தனர். இந்த இடத்திலிருந்து திருப்பூர்த் தொழிலதிபர்களின் ஒற்றுமை குலையத் தொடங்கியது. சிறுதொழில் முனைவோர்கள் கேட்பாரற்றவர்கள் ஆனார்கள்.
இந்தக் களேபரமான காலகட்டத்தில்தான் திருப்பூருக்கு ஆர்டர்கள் வழங்கிய ஐரோப்பிய அமெரிக்க இறக்குமதியாளர்கள் நொடித்துப்போயினர். பெரும்பெரும் தொகைகள் வந்துசேராமல் நின்றுபோயின. இலட்சக்கணக்கிலான தொகையை முகம்பார்த்துத் தந்துசென்றுகொண்டிருந்த திருப்பூர், பணமின்றித் திரும்பும் காசோலைகளால் தடுமாறியது. சின்ன சின்ன கொடுக்கல் வாங்கல்களுக்குக்கூட அரசியல் கட்சிப் போர்வையில் உருட்டல் மிரட்டல்கள் அரங்கேறின. டெபிட், க்ரெடிட் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம்கூடத் தெரியாத ஒரு கான்ஸ்டபிள் தகராறு முற்றிய இருவருக்கிடையே மேதாவியாய்ப் பஞ்சாயத்து செய்யவேண்டியவரானார்.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக சாயப்பட்டறைகளை மூடச்சொல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. அதற்கடுத்த ஆறு மாதங்களும் உறுதி செய்த ஆர்டர்களை முடிக்க இவ்வூர்க்காரர்கள் பட்டபாடுகளை எழுத்தில் வடிக்க இயலாது. உடனடியாகக் குஜராத்திலும் உலூதியானாவிலும் அலுவலகம் பிடித்து இங்கிருந்து பாரவுந்துகளில் துணிகளை ஏற்றி அனுப்பிச் சாயமிட்டுச் சமாளித்தார்கள். இந்தக் குழறுபடைகளில் கருநீலத்திற்குப் பதிலாக கறுப்புச் சாயம் தோய்த்து நட்டப்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
அதற்கடுத்த இடியாக இறங்கியது தீராத மின்வெட்டு. கடந்த ஏழெட்டு வருடங்களாகவே இதற்குப் பழகிப்போய்விட்டோமா அல்லது பாழ்பட்டுவிட்டோமா என்று பிரித்தறிய முடியவில்லை. முழுச் செயல்பாட்டில் பணியிருக்கும்போது, பாதி தைத்த நிலையில் மின்வெட்டானால் அந்த உடை எந்த அளவுக்குத் தரமதிப்பீட்டை நிறைவு செய்யும் ? இதனால் செலவுக்கணக்கில் தானாக பத்து விழுக்காடு உயர்ந்தது. சாவடியிலிருந்து டீசல் பிடித்துவந்து குறையக் குறைய ஊற்றி ஜெனெரேட்டரின் பாராமரிப்பையும் பார்க்கவேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள். மின்வெட்டு நேர அறிவிப்பைப் பயன்படுத்தி பணிநேரங்களில் மாறுதல்களைக் கூடச் செய்து பார்த்தார்கள். பலனளிக்கவில்லை. இந்தப் பிரச்சனை வேலை நேரத்தில், வேலைத் தரத்தில், வேலையின் விரைவுவேகத்தில் கொடுமையான சுணக்கத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர் மற்ற தொழில் நகரங்களைவிட மூன்று மடங்கு வேகத்தில் வளர்ந்ததற்குக் காரணம் இங்கு எப்போதும் இருபத்து மணி நேரமும் பணி நடந்துகொண்டே இருந்ததுதான். முதல்முறையாக தொழிற்கூடங்களின் பணிநேரம் குறையத் தொடங்கியது.
பனியன் நிறுவனத்தில் செக்கிங் பணியாளாகச் சென்றுகொண்டிருந்த மல்லிகா கட்டிட வேலைக்குச் செல்லத் தொடங்கினார். பனியன் கம்பெனிக்குச் சென்றால் நிழலில் அலுங்காமல் பணியாற்றலாம், நேரத்திற்குச் சாப்பாடு, தேநீர். மல்லிகா அந்த வேலையை விடுத்து, கட்டிட வேலைக்கு வந்து வெயிலில் கட்டுமானத் தூசுகளில் வேலைசெய்ய முன்வந்தார். ஏன்?’ என்று கேட்டேன். ‘கம்பெனிக்குப் போனா ராத்திரி ஒன்பது மணிக்கு முன்னால வூட்டுக்கு வரமுடியல. அப்பப்ப வெடிநைட்டு வெச்சுச் செய்யச் சொல்றாங்க. சோறாக்கறதுக்கும் புள்ளங்களப் பார்க்கறதுக்கும் அஞ்சு ஆறு மணிக்குள்ளாற வூட்டுக்கு வந்துட்டாதான் பரவால்ல. கட்டட வேலைக்கி வந்தா அஞ்சரைக்கு வூட்டுல இருக்கலாம், பாருங்க. அதான் இந்த வேலைக்கு வந்துட்டேன்.’ என்று கூறினார். இந்த உரையாடல் நிகழ்ந்தது ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன். இப்போது நிலைமையே வேறு. இந்த நொடிப்புக் காலத்தில் தம் பணியாளர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கமுடியாத சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உரிய இலாப விகிதமே இல்லாத ஆர்டர்களை எடுத்துச் செய்தவர்களும் இருக்கிறார்கள். தினமும் ஒன்று அல்லது ஒன்றரை ஷிப்டுகளை இயக்க முடிந்தால் அது ஆரோக்கியமான விஷயம்தான்.
’தமிழ்நாட்டில் ஊருக்கு நூறு பேர்களேனும் திருப்பூரை நம்பி இருக்கிறார்கள்’ என்று என் கவிதையொன்றில் குறிப்பிட்டு எழுதினேன். கடந்த இருபதாண்டுகளாக இந்நகரை நாடி வந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்ட குடும்பத்தினர் கணக்கிலடங்கா எண்ணிக்கையினர். இன்றும் குடும்ப அட்டை மாறுதல்வேண்டி தினமும் நூற்றுக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிகின்றன. நகரையொட்டிய புறநகர்ப் பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகரித்துக்கொண்டே சென்றது. தென் தமிழகத்தினர் மட்டுமன்று டெல்டாப் பகுதி மக்களும் வட தமிழகத்தினரும் திருப்பூரில் குடியேறி இவ்வூர்வாசிகளாகினர். கணவனும் மனைவியும் வயதுவந்த பிள்ளைகளும் பணிக்குச் சென்று பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சியை எளிதில் எட்டினர். தீபாவளி பொங்கலுக்குச் சொந்த ஊரை நாடித் திரும்பும் மக்கள்தொகையில் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியான இடத்தைத் திருப்பூர்தான் வகிக்கிறது. திருப்பூரை நோக்கி வரும் பேருந்துகளும் சரி, திருப்பூரிலிருந்து கிளம்பும் பேருந்துகளும் சரி - அமர இடமில்லாதபடி பயணிகளால் நிரம்பியிருக்கும்.
இந்த மக்கள்தொகைப் பெருக்கம் இவ்வூரை மாவட்டத் தலைநகராக்கவேண்டிய இடத்திற்கு இட்டுச் சென்றது. மாநகராட்சியாக விரிவுபடுத்த வேண்டி வந்தது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கோயம்புத்தூருக்கு உட்பட்ட நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த இவ்வூர், தொகுதி மறுசீரமைப்பில் தனி நாடாளுமன்றத் தொகுதியானது. அதாவது, மக்கள் விசையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உலகத் தொழில் நகரங்களின் வரைபடத்தில் தன்பெயரைப் பதிந்துகொண்ட இவ்வூருக்கு அரசாங்கத்தின் பார்வை கனிந்தபோது அது தன் தொழில்வளர்ச்சி வரலாற்றில் உச்சத்தில் நின்றிருந்தது.
இந்த மக்கள் நெரிசல் நகர்நாடித் தலைமறைவாக விரும்பும் குற்றவாளிகளுக்குப் பிடித்துப் போனது. தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் தேடப்படும் குற்றவாளிகள் திருப்பூர்ப் பகுதியில் அகப்படுவது வாடிக்கையானது. ஏனென்றால், பேருந்தை விட்டிறங்கியதும் நேராக ஒரு நிறுவனத்திற்குள் நுழைந்து வேலைசெய்ய இயல்கிற சூழல் இங்கு மட்டுமே நிலவுகிறது. எவ்வளவு பெரிய குற்றவாளியானாலும் அவன் சாதாரணத் தொழிலாளி வேடம் பூண்டு யாராலும் கண்டறியப்பட முடியாதவனாக இங்கு காலந்தள்ள வந்துவிடுகிறான். காவல்துறைக்கு இது பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. எப்படித் தேடித் துழாவி இவர்களைக் களையெடுப்பார்கள் என்பது சுவாரஸ்யமான கேள்வி. இப்போது காவல்துறை ஆணையரகம் அமைக்கப்பட்டு உரிய எண்ணிக்கையிலான காவலர்கள் நியமனம் பெற்றுவருகிறார்கள். நகரமெங்கும் பல்வேறு வகையான காவல் தணிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவ்வப்போது காணமுடிகிறது.
இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்புயர்வு ஏற்றுமதியை எங்கோ கொண்டுபோயிருக்கவேண்டும். ஆனால் நடந்தது என்ன ? எண்பதுகளில் சிலநூறு கோடிகளாக இருந்த பின்னலாடை ஏற்றுமதி தொண்ணூறுகளின் தொடக்கத்தில் முதன்முறையாக ஆயிரம் கோடிகளை எட்டிப் பிடித்தது. அதிலிருந்து வருடத்திற்கு ஆயிரம் கோடிகள் வீதம் ஏற்றுமதியின் மதிப்பு வளர்ச்சியின் பாதையிலேயே சென்றுகொண்டிருந்தது. உச்சமாக 2005-2006 காலகட்டங்களில் ஏற்றுமதி மதிப்பு 13000 கோடிகளைத் தொட்டது. அதிலிருந்து அந்த இலக்கத்திலிருந்து குறைவதும் தொடுவதுமாகவே இருக்கிறது. ஆனால், முதலில் பதின்மூன்றாயிரம் கோடியைத் தொட்டபோது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சுமார் ரூ. 40 என்ற அளவில் இருந்தது. அதிலிருந்து இப்போது ரூ. 60/டாலர் என்ற மதிப்புக்கு சுமார் ஐம்பது விழுக்காடு உயர்ந்துகொண்டே சென்றபோதும் திருப்பூரின் ஏற்றுமதி மதிப்பு 13000 கோடிகள் என்ற அளவில் அப்படியே இருக்கிறது. அதாவது மதிப்பளவில் அதேயளவு ஏற்றுமதி நிகழ்வதுபோல் தோன்றினாலும் சுமார் ஐம்பது விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி நிச்சயம் சரிந்திருக்கிறது. இடையில் விலைவாசி உயர்வால் ஏற்பட்ட அளவு மாற்றமும் உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியே இந்தத் தோற்றத்தைக் காப்பாற்றியிருக்கிறது.
சப்தகிரி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர் ரமேஷ் ‘பல பையர்கள் இந்திய ரூபாயில் விலையை உறுதி செய்கிறார்கள். இந்த ஏற்ற இறக்கம் அவர்கள் தரப்பிலும் கையைக் கடிப்பதால் தொகையைச் செலுத்துவதில் கால தாமதம் ஏற்படுத்துகிறார்கள். சமயத்தில் கணிசமாகப் பிடித்தமும் செய்துகொள்கிறார்கள்.’ என்கிறார். ‘டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நாற்பதாக இருந்தாலும் சரி… அறுபதாக இருந்தாலும் சரி… அது ஓரளவு நிலைத்த இடத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான் ஏற்றுமதி இறக்குமதித் தொழிலுக்கே நல்லது. இந்த இயல்புக்கு மாறான சூழ்நிலைகளைக் கருதித்தான் நிறுவனத்தை விரிவுபடுத்தும் எண்ணத்தைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டுவிட்டேன்’ என்கிறார்.
திருப்பூர்த் தொழிலின் ஒட்டுமொத்த நிலவரத்தை அறிந்துகொள்வது அவசியமானது. இவ்வூரின் முன்னோடி ஏற்றுமதியாளர்களில் ஒருவரான யுவராஜ் சம்பத்துடன் பேசியபோது உலக நிலவரங்களைப் பட்டியலிட்டார். ’நம்முடைய முதல் போட்டியாளரான சீனாவில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற விதி தளர்த்தப்பட்டு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். இது சீனாவில் உழைப்பாற்றலுள்ள இளையவர்கள் தொகை குறைந்துவிட்டதையே காட்டுகிறது. நம் தேசத்தில் இளையவர் எண்ணிக்கை சமவிகித எண்ணிக்கையில்தான் பேணப்படுகிறது. இதுவே நமக்கு நல்ல செய்தி. இந்த அடிப்படையில்தான் பருத்தி நூல்விலை இடையில் திடுமெனக் குறைந்தது. எல்லா நூற்பாலைகளுமே இருப்பை விரைந்து குறைத்துக்கொண்டுள்ளார்கள். இது ஆடைத்தொழில் துறைக்கு நல்ல வாய்ப்பு.’ என்றார். அவர் சொன்னது உண்மைதான். இடையில் நூல்கண்டுகளின் விலை பத்து விழுக்காடுவரை விலைவீழ்ச்சி கண்டது. ’நம்முடைய பிரச்சனை பேராலைகளாக நம் தொழிற்கூடங்களை அமைக்கவே முடியவில்லை. கம்போடியாவில் நான் பார்வையிட்ட தொழிற்கூடத்தில் சாதாரணமாக 3840 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். சீன முதலாளிகள் அங்கே முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவ்வாறு நாமும் பல்வினைச் சீராலைகள் (Vertical Integrated Factory) அமைத்தால் இலட்சக்கணக்கான எண்ணிக்கையிலான ஆடைகளை சில நாள்களில் உற்பத்தி செய்து தரமுடியும்’ என்கிறார்.
திருப்பூர் போன்ற நகரங்களில் பணியுள்ள தொழிற்சாலைகளுக்குத் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அருகிலுள்ள தொழிற்கூடத்திற்கு, நண்பர்கள் அதிகம் பணியாற்றும் தொழிற்கூடத்திற்கு, கூடுதலாக சம்பளம் கிடைக்கும் இடத்திற்கு - என அவர்கள் தேர்வு செய்து பணிக்குச் செல்கிறார்கள்.
கந்தன் மில்ஸ் என்ற பெயரில் சிறிய ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கியுள்ள சந்திரமோகன் என்ற இளைஞர் ஏற்றுமதி என்னும் வாய்ப்பைவிட உள்நாட்டுத் தேவைக்கென உற்பத்தியில் ஈடுபடுவதை விரும்புகிறார். ‘நமக்கென்று ஒரு நல்ல பிராண்ட்-ஐ உள்நாட்டுச் சந்தையில் உருவாக்கிவிட்டால் இந்தத் தொழிலில் பெரிய அளவில் சாதிக்கலாம்’ என்கிறார். ’வெளிநாட்டு ஏற்றுமதி மதிப்பான வாய்ப்புத்தான் என்றாலும் உள்நாட்டுச் சந்தை வாய்ப்பு அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி. அமைதியாக அந்த வர்த்தகம் நடந்துகொண்டுதான் உள்ளது.’ என்பது அவர் கருத்து. உள்நாட்டுத் தேவைக்கான பனியன் ஜட்டி உற்பத்தியில்தான் திருப்பூர் தன் கணக்கைத் தொடங்கியது. எந்த நெருக்கடிகள் வந்தாலும் உள்நாட்டுச் சந்தையில் இவ்வூருக்கென்று தனி மதிப்பு இருக்கவே செய்கிறது.
திருப்பூர் என்னும் நகரம் ஒற்றைத் தொழிலை மையப்படுத்தி உருவான பன்முக நகரம். நெருக்கடிகள் அனைத்தையும் வென்று பழையபடி பயணிக்கக்கூடிய பண்பாட்டுச் செழுமை இங்கு வாழும் மக்களுக்கு உண்டு. இதற்கு முன்னேயும் பல சுணக்கங்களைப் பார்த்துப் பழகியவர்கள் இவர்கள். அவற்றோடு கடுமையாகப் போராடி வென்று காட்டியவர்கள். உணவுக்கான முதல் தேவை தீர்ந்ததும் மனிதர்கள் உடுத்தத் தேவையான பொருளைத்தான் உற்பத்தி செய்கின்றார்கள். உடை ஆடம்பரத் தேவையோ, நாகரிக - கால வளர்ச்சிப்போக்கில் காணாமற்போவதோ அன்று. இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தால் இவ்வூர் தன் முரண்கள் அனைத்தையும் களைந்து எவ்வூரும் எட்டமுடியாத உயரத்திற்குச் சென்றுவிடும் என்பது எங்கள் நம்பிக்கை !
- கவிஞர் மகுடேசுவரன்
இந்திய அணி ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்றிருந்தது. ஸ்ரீகாந்த் தலைமையேற்ற அந்த அணிதான் இதுவரை அமைந்ததிலேயே மட்டமான அணி.
டெண்டுல்கர் என்கிற பதினாறு வயதுப்பையனும் அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போது அவர் டெண்டுல்கர்தான். சச்சின் என்பதெல்லாம் பிற்பாடு வந்த பழக்கம்.
மதியம் விடுமுறை என்றதால் நண்பர்களோடு பள்ளியைவிட்டு வெளியேறிய எங்கள் கூட்டம் அருகிலிருந்த சாலிடர் டிவி கடையைநோக்கி ஓடியது. அங்கே பாகிஸ்தானுடன் ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடிக்கொண்டிருந்தது.
ஸ்ரீகாந்த் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துகளை எல்லாம் காற்றில் துழாவிக்கொண்டிருந்தார். ஏழெட்டு ஓவர்களுக்குப் பிறகு ஒரு ஃபோர் அடிப்பதுதான் அப்போதைய மரபு. ஐம்பது ஓவர்களில் 190 ஓட்டங்கள் என்பதை இலக்காக்கினாலே ’துரத்துவது கடினம்’ என்பார்கள் வர்ணனையாளர்கள். அந்த மாதிரி இலக்கைத்தான் பாகிஸ்தான் அணி நிர்ணயித்திருந்தது.
இலக்கைத் துரத்திய இந்திய அணி அடுத்தடுத்து முன்வரிசை வீரர்களை இழந்தது. ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். ஐந்தாறு விக்கெட்டுகள் சாய்ந்திருந்ததால் சாலிடர் டிவி கடைமுன் கூடிய கூட்டம் கலையத் தொடங்கியது. நானும் கிளம்ப எத்தனிக்கும்போதுதான் நண்பன் என்னை நிறுத்தினான். ‘இருடா... டெண்டுல்கர்னு புது ஆளு. எப்படி ஆடறான்னு பார்த்துட்டுப் போவோம்’ என்றான்.
நம்பிக்கையில்லாமல் பார்த்தேன். பாகிஸ்தான் அணியில் அப்துல் காதிர் என்று ஒரு சுழற்பந்து வீச்சாளர். கிலுகிலுப்பை ஆட்டுவது மாதிரி பந்தை எறிவதற்கு முன் ஒரு சுழற்று சுழற்றி வடகிழக்கிலிருந்து தென்மேற்காகப்போய்ப் பின் பந்து வீசுவார். டெண்டுல்கர் என்ற அந்த சின்ன பையன் அவர் பந்துவீச்சை எதிர்கொள்ள வந்து நிற்கிறார்.
வெற்றிக்கு அருகில் இருக்கும்போது பாகிஸ்தான் வீரர்கள் முகத்தில் ஓர் அலட்சிய பாவனை அப்பிக்கொள்ளும். மைதானத்திற்குள் சக வீரர்களுடன் வாயெல்லாம் பல்லாகச் சிரித்துப் பேசிக்கொள்வார்கள். அப்படி ஓர் அளவளாவலை முடித்துக்கொண்டு பந்து வீச வந்த அப்துல் காதிர் அந்தச் சின்ன பையனுக்குப் பந்து வீசத் தொடங்கினார்.
பந்து வீசிய அப்துல் காதிர் வானத்தைப் பார்த்தது மட்டும்தான் தெரிந்தது. ஆட்டம் நடந்தது பாகிஸ்தான் மண்ணில் என்பதால் பார்வையாளர் தரப்பில் திடுமென மைதானக் கூச்சல் அடங்கியது. நடுவர் ஆறு என்று இருகை உயர்த்தினார். கடைமுன் தொங்கிய முகங்களோடு பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. ‘பரவால்லயே. காதிர் பால்ல சிக்ஸ் அடிச்சிட்டாம்பா’ என்றார் ஒருவர்.
‘ஏதோ ஞாபகத்தில அந்தப் பந்தைப் போட்டுட்டேன்’ என்கிற தோரணையோடு அடுத்த பந்தை வீசினார் அப்துல் காதிர். டெண்டுல்கர் என்னும் அந்த இளம்வீரர் இறங்கி வீசினார் பாருங்கள், அதுவும் ஆறு. அடுத்தடுத்த பந்துகளும் ஆறும் நான்கும். இப்படி அந்த ஓவரில் சுமார் இருபத்தைந்து ரன்களைக் குவித்தார் டெண்டுல்கர்.
அப்போதெல்லாம் ஆட்டம் தொடங்கி எட்டாவது ஓவரில்தான் இருபத்தைந்து ரன்கள் என்பது அணியின் ஸ்கோராக இருக்கும். டெண்டுல்கர் ஒரே ஓவரில் வான வேடிக்கை காட்டியதால் இந்தியா ஜெயித்துவிடுமோ என்ற நம்பிக்கை தோன்றியது. அந்தப் போட்டியில் இந்தியா தோற்றது என்றாலும் டெண்டுல்கர் என்ற அந்தப் பெயர் காற்றின் திசையெங்கும் பரவத் தொடங்கியது.
'காதிர் வீசிய சுழற்பந்தில் டெண்டுல்கர் விட்ட முதல்சிக்ஸை லைவாகப் பார்த்த’ பெருமைக்குரியவர்களில் நானும் ஒருவன். அன்றிலிருந்து இரண்டாயிரத்து ஐந்துவரை டெண்டுல்கர் ஆடிய அனைத்து ஆட்டங்களையும் கண்கொட்டாமல் பார்த்திருக்கிறேன். அவர் ஆட்டங்களைக் கண்ணுற்ற தருணங்கள் நம் ரசனையின் மதிப்பான பொழுதுகள்.
இனி கிரிக்கெட் என்னும் விளையாட்டுக்கு அந்தப் பழைய மயக்கத்தை மக்கள் காட்டமாட்டார்கள். சச்சின் டெண்டுல்கரைப் போன்ற இன்னொருவர் அந்த வெற்றிடத்தை நிரப்பப் போவதும் இல்லை.
டெண்டுல்கர் விரைவில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளார் என்றுணர்ந்திருந்ததால் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஆடிய ஆட்டங்கள் எதையும் பார்க்கவில்லை. அவர்பற்றிய செய்திகளிலும் நான் ஈடுபாடு காட்டவில்லை. அப்படி விலக்கிக்கொண்டதால்தான் இந்தப் பிரிவை என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது.
அறியாச் சிறுவனாக சர்வதேச அரங்கில் நுழைந்த அந்தச் சிறிய வீரர் எத்தனை மைதானங்களை, எத்தனை விளையாட்டுத் தருணங்களை, எத்தனை பந்தெறிவுகளை, எத்தனை ஏற்ற இறக்கங்களை, எத்தனை சவால்களை, எத்தனை வெற்றி தோல்விகளை - பார்த்திருப்பார்...! அந்தக் களத்திலிருந்து வெளியேறி வெளியே நிற்கவேண்டிய இந்தக் கணம் யாராலும் எளிதில் கடந்துபோகக் கூடியதன்று. அந்த மனத்திடத்தை அவர் பெறவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
- கவிஞர் மகுடேசுவரன்
இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது நன்றாகத் தெரிந்துவிட்டதால் இந்தக் கோடைக்கு கோடை வாசஸ்தலத்திற்கு மனைவி பிள்ளைகளை அழைத்துச் செல்வதாக முடிவெடுத்தேன். கோடை காலத்தில் கோடை வாசஸ்தலங்களை எட்டியும் பார்க்கக் கூடாது என்று சபதமே எடுத்திருந்தேன். அங்குள்ளவர்களும் மக்களே, அங்குள்ளவையும் மேடு பள்ளங்களாலான புவியியல் தோற்றங்களே என்கிற தெளிவு மட்டுமே காரணமில்லை. அதுநாள்வரை இல்லாத புதுவெறியோடு ஊருலகத்தில் உள்ள அத்தனை மக்களும் புற்றீசல் போலப் படையெடுத்து அச்சிறுநகரங்களைப் புகையாலும் புழுதியாலும் நெருக்கடியாலும் கழுத்தைத் திருகிக் குற்றுயிராக்கி விடுகிறார்கள் என்பதுதான் முதல் காரணம். மலையூர்களுக்குச் செல்ல விரும்பினால் கோடை துவங்குவதற்கும் கார்காலம் முடிவதற்கும் இடையிலுள்ள ஒரு பருவத்தைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். குளிர் பிடிக்கும் என்றால் நடுங்கும் குளிர் மாதங்களும் கூட பயணத்திற்கு ஏற்றவைதாம்.
அருகில் உள்ள உதகையும் கோடைக்கானலும் எனக்கு வாந்தி வருகிற அளவிற்கு ஒவ்வாமை ஏற்படுத்திய இடங்கள் என்பதால் மூணாறுக்குச் செல்வதாக இறுதியாயிற்று. மூணாற்றில் ஹைடல் பார்க், மாட்டுப் பட்டி அணை, சில காட்சி முனைகள், இரவிகுளம் வரையாட்டுப் பூங்கா ஆகியன பார்க்கவேண்டியவை என்றாலும் செல்லும் வழியில் மறையூர் தொல்குடிகளின் கல்லறை மேடு, தூவானம் அருவி, லாகூன் அருவி ஆகியனவும் காண்பதற்கு அழகியவை. எங்களுக்கு உடுமலைப் பேட்டையிலிருந்து மூணாறு 89 கிலோமீட்டர்கள் என்பதால் இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயத்தின் யானைத்தடங்கள் வழியாக அமராவதி அணையின் கரையைப் பிடித்தபடிதான் செல்ல வேண்டும். ஊர் வழமையான ஒரு மலையூர் என்றாலும் செல்வழிக் காட்சிகளும் பசுமையும் கண்களுக்கு விருந்து.
போகும்போது மொத்தம் ஆறு இடங்களில் வண்டிகளை சாரை சாரையாக நிற்கவைத்து வண்டி ஓட்டுநரைக் குச்சுக்கு வரவழைத்து வண்டி எண், வகை, புறப்பாடு போய்ச்சேர் இடங்கள், உரிமையாளர் பெயர், கையெழுத்து என கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். மறக்காமல் இருபது ரூபாய் கொடுங்கள் என்று லஞ்சத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த லஞ்சப் பொறுக்கிகள் உள்ளவரை இந்த தேசத்தை எந்த அன்னா ஹசாரேவும் காப்பாற்ற முடியாது.
மறையூரைத் தாண்டி ஓர் பள்ளத்தில் சினிமா ஷூட்டிங் கும்பல் காணப்பட்டது. சாலையோரத்தில் நின்ற அந்தக் கும்பலின் வண்டிகளில் இளவட்ட சினிமா முயற்சியாளர்கள் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். உடைகளுக்கான வேனிலிருந்து ஒருவர் பழைய புடவைகளைச் சாலையில் விரித்து வைத்து சுத்தியால் கொட்டி மேலும் கந்தலாக்கிக்கொண்டிருந்தார். யார் நடிகர்கள் என்று கேட்டோம். முரளியோட பையனும் அரவான் ஹீரோயினும் என்ற பதில் கிடைத்தது. படத்தின் பெயர் என்ன? என்றேன். ’பரதேசி’ என்று உங்களைத் திட்டும் பாவனையில் சொன்னான் ஒருவன். படத்தின் இயக்குநர் யார் என்றதற்குப் ‘பாலா’ என்றார்கள். சாலையில் சேலையை விரித்து வைத்துக் கந்தலாக்கிக்கொண்டிருந்ததற்கான காரணம் எனக்குக் கிடைத்துவிட்டது. பாலாவைச் சந்திக்கலாமா என்று ஓர் எண்ணம் தோன்றியது. புத்தகக் கண்காட்சியில் சுரேஷ் கண்ணனுடன் பாலா வந்தபோது ‘உங்களைப் பற்றி பாலுமகேந்திரா சார் நிறைய சொல்லியிருக்கார்’ என்று அவர் என்னோடு உரையாடிய ஞாபகம் வந்தது. வேண்டவே வேண்டாம்…. தன் பட ஷூட்டிங்கில் அதன் டைரக்டர் ஒரு மசை நாயைப்போல் காணப்படுவான் என்று என் ஞானம் சொல்லியதால் அப்படியே எஸ்கேப்.
மூணாறு போய்ச் சேர்ந்ததும் கிழவி கெட்ட வார்த்தை பேசத் துவங்கியதுபோல் அத்தனை மழை. அந்த மழை ஓர் இரண்டு மணி நேரம் எங்களை ஒரு தாழ்வாரத்தில் கட்டிப் போட்டுவிட்டது. சாலைகள் எல்லாம் நசுங்கிப் பிதுங்கும் வண்ணம் ஒரே வாகன நெரிசல். கேரள மஞ்சள் தோலர்களும் திருத்தமான மீசைக்காரர்களும் எங்கும் திரிகிறார்கள் என்றாலும் தமிழுக்குக் குறையில்லாத ஊர் மூணாறு. அந்தக் கருப்பு ஆட்டோக்களும் ஜீப்புகளும் ஆட்களைப் பிதுங்கப் பிதுங்க அள்ளிப்போட்டுக்கொண்டு எந்தப் பள்ளத்திலும் விழாமல் பாய்கின்ற இலாகவத்திற்கு எதையும் ஈடாகத் தரலாம்.
திரும்பி வரும்போது நன்றாக இருட்டிவிட்டது. வழியில் புலியோ யானையோ சாலையின் குறுக்கே நின்றால் என்ன செய்வது என்ற அச்சம் வேறு. நல்லவேளை ஒரே ஒரு காட்டுப் பன்றி மட்டும் குறுக்கிட்டு ஓடியது.
- கவிஞர் மகுடேசுவரன்
Copyright © 2024 magudeswaran.com - All Rights Reserved.
இணையதள போக்குவரத்தை பகுப்பாய்வு செய்வதற்கும் உங்கள் இணையதள அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் தரவு மற்ற எல்லா பயனர் தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.