எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
கவிஞர் மகுடேசுவரனின் பெற்றோர் பெயர்கள் கோவிந்தராஜன், சரசு என்கின்ற சரசுவதி. பெற்றோரின் திருமணம் ஈரோடு மாவட்டம், காவிரிக் கரையிலுள்ள கொடுமுடித் திருக்கோவிலில் நடைபெற்றது. தம் திருமண நாளன்றே கொடுமுடிக் கடவுளரான மகுடேசுவரன் முன்பு தமக்கு ஆண்மகவு பிறந்தால் மகுடேசுவரன் என்றும் பெண்மகவு பிறந்தால் மகுடேசுவரி என்றும் பெயர் சூட்டுவதாக வேண்டிக்கொண்டார் கோவிந்தராஜன். அவ்வாறே ஆண்மகவு பிறந்ததும் மகுடேசுவரன் என்று பெயர் சூட்டினார். பிறந்த நாள் எண் 06 சூன் திங்கள் 1975. மகுடேசுவரனின் தந்தையார் கூட்டுறவுப் பயிற்சிப் படிப்பு முடித்து கூட்டுறவு வங்கிச் செயலாளராகப் பணியாற்றியவர். தாயார் இல்லத்தரசி. பத்தாண்டுகட்குப் பிறகு கூட்டுறவு வங்கிப் பணியிலிருந்து வெளியேறிய கோவிந்தராஜனார் தனியார் பேருந்துப் போக்குவரத்து நிறுவனமொன்றில் செயலாளராகப் பணியாற்றினார். கொங்குநாட்டின் பல்வேறு சிற்றூர்களில் அலையும்படியானது பெற்றோரது வாழ்க்கை தாய்வழிப் பிறப்பூரான திருப்பூரில் நிலைபெற்றது. நூற்றாண்டுப் பழைமையை நெருங்கும் திருப்பூர் நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். அங்கே தமிழாசிரியராக வாய்த்த கதிர்வேலனார்தான் மகுடேசுவரனின் தமிழார்வத்தைத் தூண்டியவர். பள்ளி அருகேயிருந்த நூலகத்தில் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டார். பள்ளியில் முதன்மை மாணாக்கராக விளங்கினார். பேச்சு, கட்டுரை, பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று எண்ணற்ற பரிசுகள் பெற்றார். பாரதிதாசன் நூற்றாண்டு விழாவமயம் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கேற்று கோயம்புத்தூர் மாவட்டத்தளவில் வெற்றி பெற்றவர். அதன் தொடர்ச்சியாக மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாவட்டத்தின் சார்பாகக் கலந்துகொள்ளும்படி சென்னைக்கு அனுப்பப்பட்டவர்.
தமிழ்க் கவிதை ஆர்வம்
பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே பாலமித்ரா என்ற குழந்தைகள் இதழில் மகுடேசுவரன் எழுதிய கடிதம் வெளியாயிற்று. அதுதான் இதழச்சில் வெளியான முதலெழுத்து. அதன் பிறகு பன்னிரண்டாம் அகவை முதற்கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளியில் கதிர்வேலனார் யாப்பிலக்கணத்தை முழுமையாகக் கற்பித்தார். அது மகுடேசுவரனின் ஆர்வத்தைப் பன்மடங்கு பெருக்கியது. எட்டாம் வகுப்பு படிக்கையில் கோகுலம் இதழுக்கு எழுதியனுப்பிய மரபுக் கவிதை வெளியானது. அதன் பிறகு எண்ணற்ற கவிதைகள், கதைகள் உள்ளிட்ட எழுத்துகள் கோகுலத்தில் தொடர்ந்து வெளியாயின. பூந்தளிர் இதழிலும் நிறையவே வெளியாயின. பள்ளிக் காலத்திலேயே மகுடேசுவரன் எழுதிய கவிதைகள் இராணி, பாக்யா, தினமலர் வாரமலர், தமிழ் அரசி போன்ற வெகுமக்கள் இதழ்களில் வெளியாயின. பள்ளிக் கல்வி முடிந்ததும் திருப்பூர்த் தொழில் சார்ந்த நிறுவனமொன்றில் பணிக்குச் சேர்ந்தார். அப்பணிக்காலத்தில்தான் கணையாழியின் அறிமுகம் ஏற்பட்டது. அதன் பிறகு நவீன இலக்கியக் கவிதைகளின்பால் அவரது அறிமுகம் தொடங்கியது. கணையாழியில் மகுடேசுவரனின் கவிதைகள் வெளியாகத் தொடங்கின. அக்கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்தவர்கள் ஞானக்கூத்தனும் சுஜாதாவும் ஆவர். மகுடேசுவரனின் முதல் கவிதையையே (குடை என்பது கவிதைத் தலைப்பு) எழுத்தாளர் சுஜாதா பாராட்டிக் குறிப்பிட்டுத் தம் கடைசிப் பக்கத்தில் எழுதினார். “கவிதை எழுதி வருந்தும் வருத்தும் இளைஞர்கள் படிக்க வேண்டிய கவிதை” என்பது அந்தப் பாராட்டு. “மகுடேசுவரனின் கவிதைகள் இரத்தத் துடிப்பு மிக்கவை” என்று ஞானக்கூத்தன் பாராட்டினார். கணையாழி, புதியபார்வை, சுபமங்களா, கவிதாசரண், நிகழ், கனவு, விருட்சம், இலக்கு, நடுகல், தூறல் போன்ற பல இதழ்களில் மகுடேசுவரனின் கவிதைகள் வெளியாகத் தொடங்கிப் பாராட்டப்பட்டன. முதல் தொகுப்பு 1996ஆம் ஆண்டு பூக்கள் பற்றிய தகவல்கள் என்ற பெயரில் வெளியாயிற்று. எழுத்தாளர் சுஜாதாவும் கல்யாண்ஜியும் முன்னுரை எழுதியிருந்தனர். அத்தொகுப்பு அவ்வாண்டில் வெளியான மிகச்சிறந்த தொகுப்பாக ‘பாரத ஸ்டேட் வங்கி’ விருதினைப் பெற்றது. அத்தொகுப்பிலிருந்த கவிதைகளை இயக்குநர் பாலசந்தர், பாலுமகேந்திரா ஆகியோர் தம் தொலைக்காட்சித் தொடர்களில் பயன்படுத்தினர். மகுடேசுவரனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘அண்மையை’ இயக்குநர் பாரதிராஜா 1997ஆம் ஆண்டு வெளியிட்டார். அதற்குத் திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது கிடைத்தது. மூன்றாவது தொகுப்பான ‘யாரோ ஒருத்தியின் நடனம்’ தொகுப்பிற்கும் 2001ஆம் ஆண்டு வெளியான சிறந்த தொகுப்பிற்கான ’பாரத ஸ்டேட் வங்கி’ விருது கிடைத்தது. அதுவரை தமிழில் நாற்பது முதல் எண்பது கவிதைகள் அடங்கிய கைக்கு அடக்கமான கவிதைத் தொகுப்புகளே வெளியாகின. பெருந்தொகுப்புகள் அக்கவிஞரின் வாழ்நாள் முழுவதும் எழுதப்பட்ட மொத்தத் தொகுப்பாகவே இருக்கும். நானூறு கவிதைகள் அடங்கிய நானூறு பக்கத் தொகுப்பாக அதுவும் ஒரே பொருளில் அமையவேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார். காமக்கடும்புனல் என்ற தொகுப்பு வெளியாகி இலக்கிய உலகமே பரபரப்படைந்தது. பிறகு கட்டுரை, உரைநடை, குறளுரை என்று மகுடேசுவரனின் இலக்கியப் பயணம் முழுவீச்சில் தொடர்ந்தது.
இரண்டாயிரத்திற்குப் பிறகான மொழிப்பயன்பாட்டில் எண்ணற்ற பிழைகள் தோன்றத் தொடங்கியதும் தமிழ் இலக்கணம் சார்ந்து மக்களிடையே விழிப்புணர்வூட்டவேண்டும் என்ற நோக்கில் தமிழ் அறிவோம் நூல் தொடர்களை எழுதினார். அக்கட்டுரைகள் பலவும் புதிய தலைமுறை, நக்கீரன், தினமலர் பட்டம் உள்ளிட்ட எண்ணற்ற இதழ்களிலும் வெளிவந்தன. கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் இலக்கணம், மொழியியல் சார்ந்து மூவாயிரம் பக்கங்களுக்குமேல் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவற்றில் இரண்டாயிரம் பக்கங்கள் தமிழ் அறிவோம் வரிசையில் நூலாக்கம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கணம் மொழியியல் சார்ந்த உரையாடல்கள் ‘புலவர்களால் புலவர்களிடையே புலவர்களுக்காக’ நடந்துகொண்டிருந்த போக்கினை உடைத்து ‘மக்களிடையே, மக்களோடு மக்களாக, மக்கள் பயன்பாட்டிற்காக’ நடத்தப்பட்ட உரையாடல்களும் எழுத்துகளும் மகுடேசுவரனுடையவை. இளையோரும் பள்ளிப் பிள்ளைகளும் தமிழாசிரியர்களும் தமிழ் சார்ந்த ஐயங்களைக் களைய நாடத்தகுந்தவராக இணையத்தில் செயல்படுகிறார். தமிழ் அறிவோம் வரிசையில் தம் வாழ்நாளில் நூறு நூல்களை எழுதும் திட்டத்தில் இயங்குகிறார். இணைய வழியில் தமிழ் கற்பிக்கிறார்.
2006ஆம் ஆண்டு வெளியான ‘நஞ்சுபுரம்’ என்ற திரைப்படத்தில் பாடல்கள் உரையாடல்கள் எழுதியுள்ளார். பெரும்பாலும் ஆங்கிலச் சொற்கலப்பின்றி ஊர்ப்புறத்தமிழில் எழுதப்பட்ட உரையாடல்கள். ‘ஊருல உனக்கொரு மேடை’ பாடல் இன்றைய இளைஞர்களால் குறுங்காணொளி வடிவங்களில் பெரிதும் பயன்படுத்தப்படுவது. 2023ஆம் ஆண்டில் வெளியான ‘மத்தகம்’ என்ற வலைத்தொடரின் தலைப்புப் பாடலும் மகுடேசுவரன் எழுதியதே. அவர் எழுதிய பல திரைப்பாடல்கள் வெளியாகாத திரைப்படங்களில் முடங்கிவிட்டன.
தமிழ்நாட்டு அரசின் பள்ளிப் பாடநூல் உயர்மட்டத் துணைக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். கோயம்புத்தூர்ப் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பாடத்திட்டக்குழு உறுப்பினராக உள்ளார். நடுவணரசின் ‘சாகித்திய அகாதமி’ பரிசளிப்புத் தேர்வுக்குழுவிலும் இடம்பெற்றவர்.
மகுடேசுவரனின் தொலைக்காட்சிப் பங்களிப்புகள் பல. விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட முறைகள் பங்கேற்றுள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகளில் நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடன், குங்குமம், குமுதம், கல்கி, தினமலர், தமிழ் இந்து, மாலைமலர் என அனைத்து முன்னணித் தமிழ் இதழ்களிலும் மகுடேசுவரனது படைப்புகள் வெளிவந்துள்ளன.
பெற்றுள்ள விருதுகள் :
1. ஆனந்த விகடன் பவளவிழா விருது,
2. பாரத ஸ்டேட்வங்கி விருது - இருமுறை,
3. கலை இலக்கியப் பெருமன்ற விருது.
4. திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருது.
5. ஈரோடு தமிழன்பன் வாழ்நாள் சாதனையாளர் விருது
6. கவிஞர் சிற்பி இலக்கிய விருது
Copyright © 2024 magudeswaran.com - All Rights Reserved.
இணையதள போக்குவரத்தை பகுப்பாய்வு செய்வதற்கும் உங்கள் இணையதள அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் தரவு மற்ற எல்லா பயனர் தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.