எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
கவிஞர் மகுடேசுவரன்
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
தேனாகவும்
தென்றலாகவும்
மாறி மாறி இனிதாகும்
ஒரு திட்டு உண்டு -
"நீங்க இருக்கீங்களே..."
யாருமில்லாதபோதே
எதனையும் பொருட்படுத்தாது
வாய்விட்டுச் சிரிக்கும்
பழக்கமுள்ள உனக்கு
அழுகை எதற்கு ?
ஏழு எண்மராக
இருப்பூர்தியில் ஏறுவோரிடம்
ஒரேயொரு குழந்தை
இருந்துவிட்டால் போதும்.
இருப்பூர்தி
பொன்னூர்தியாகிறது.
கைம்மாற்றி மாற்றி
எடுத்துக் கொஞ்சப்படும் குழந்தை
தனித்துச் செல்லும்
என் போன்றோரையும்
ஓரக்கண்ணால் பார்த்து
"உனக்கும் இந்தா...
கொஞ்சிக்கோ..." என்று
அருள்பொழிந்துவிடுகிறது.
எனது தனிமைக்கு
முப்பத்தேழு வடிவங்கள் உண்டு.
காலைத் தனிமைக்குப்
பனித்துளியின் குன்றிமணி வடிவம்.
நண்பகல் தனிமைக்குப்
பறப்பில் உதிர்ந்த இறகு
தன்னைப் பார்ப்பதற்காக
வளைய முயன்ற வடிவம்.
பிற்பகல் தனிமைக்கு
நீளும் நிழலின்
விலகியோடும் வடிவம்.
மழைத்துளி
மண்ணில் பட்டதும்
வட்டமாய்க் கூர்முனைகள் தோன்றும்
ஈரமண் வடிவம் மாலைக்கு.
இரவில்
என் தனிமையின் வடிவங்கள்தாம்
மீதமுள்ள அனைத்தும்.
மீன்முள்ளின் நீந்தல் வடிவம்,
நெடுஞ்சுடரின் சுருள்மஞ்சள் வடிவம்,
கடித்த சட்டை முனையின்
கசங்கிய வடிவம்,
கால்வெடிப்பின் காணக்கூசும் வடிவம்,
கடலில் மூழ்காது ததும்பும்
கலக்கட்டை வடிவம்.
எவ்வூரையும்
பழிக்காதீர்.
அவ்வூரில்தான்
நாம் இப்போது அணிந்திருக்கும்
ஆடையினது நூல்
நூற்கப்பட்டிருக்கலாம்.
அவ்வூரில்தான்
நாம் இன்று அடைந்துள்ள
அறிவுக்காகப் பாடுற்ற மேன்மக்கள்
பிறந்து வளர்ந்திருக்கலாம்.
அவ்வூரில்தான்
நாம் இன்று பயன்படுத்தும்
எண்ணற்ற கருவிகட்கான
இரும்புகள் இழைக்கப்பட்டிருக்கலாம்.
அவ்வூரில்தான்
நமக்கான ஒரு பொருளை ஆக்கும் பணியில்
ஒரு தொழிலாளி ஈடுபட்டிருக்கலாம்.
அவ்வூரில்தான்
கலை இலக்கியப் போக்குகள் பலவும்
கருக்கொண்டு பிறந்திருக்கலாம்.
அவ்வூரில்தான்
நம் நோயைத் தணிக்கப் போகும்
ஒரு மருத்துவமனையும்
மலைக்காற்றும் இருக்கலாம்.
அவ்வூரில்தான்
வளரும் பிள்ளைகள் கற்கப் போகும்
பள்ளி கல்லூரிகள் காத்திருக்கலாம்.
அவ்வளவு ஏன்...
அவ்வூரில்தான் உங்களை
உள்நெஞ்சில் வைத்து உருகும்
ஒரு காதலும் இருக்கலாம்.
எவ்வூரையும் பழிக்காதீர் !
கிளிக்குக்
கழுத்து வட்டம் போல
குதிரைக்குக்
கூந்தல்வால் போல
நாய்க்குத்
தொங்குநாக்கு போல
மானுக்கு
மருள்கண்கள் போல
மயிலுக்கு
மணித்தோகை போல
சேவற்குச்
செங்கொண்டை போல
ஆவுக்குப்
பால்மடி போல
பூனைக்கு அழகு
மூக்கடிப் பூம்பரப்பு.
Copyright © 2024 magudeswaran.com - All Rights Reserved.
இணையதள போக்குவரத்தை பகுப்பாய்வு செய்வதற்கும் உங்கள் இணையதள அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் தரவு மற்ற எல்லா பயனர் தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.